சேவை விதிமுறைகள்



Facebookக்கு வரவேற்கிறோம்!

தனிப்பட்ட விதிமுறைகள் (இவை அல்ல) பொருந்தும் என வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளவை தவிர்த்து, Facebook மற்றும் அதன் தயாரிப்புகள், அம்சங்கள், பயன்பாடுகள், சேவைகள், தொழில்நுட்பங்கள் ஆகியவை தொடர்பான உங்கள் உபயோகமும் நாங்கள் வழங்கும் மென்பொருளும் (Facebook தயாரிப்புகள் அல்லது தயாரிப்புகள்) இந்த விதிமுறைகளின் கீழ் நிர்வகிக்கப்படும்.

1. எங்கள் சேவைகள்

நட்பான சமூகத்தை உருவாக்கி, உலகை இன்னும் நெருக்கமானதாக மாற்றும் சக்தியை அளிப்பதே எங்கள் நோக்கமாகும். இந்த நோக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வதற்கு உதவும் வகையில், கீழே விவரிக்கப்பட்டுள்ள தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்குகிறோம்:
உங்களுக்குத் தனிப்பட்ட அனுபவத்தை வழங்குதல்:
இடுகைகள், கதைகள், நிகழ்வுகள், விளம்பரங்கள் மற்றும் செய்தி வழங்கலில் நீங்கள் பார்க்கும் பிற உள்ளடக்கம் அல்லது நீங்கள் பின்தொடரும் பக்கங்களில் உள்ள எங்கள் வீடியோ தளம் மற்றும் டிரெண்டிங், Marketplace, தேடல் போன்று நீங்கள் பயன்படுத்தக்கூடிய பிற அம்சங்கள் ஆகியவற்றின் மூலம் உங்களின் Facebook அனுபவம் வேறெவரும் பெற்றிராத வகையில் மிகச் சிறப்பாக அமையும். உங்களுக்குத் தொடர்புடைய உள்ளடக்கத்தை வழங்குவதற்காக, நீங்கள் உருவாக்கும் இணைப்புகள், நீங்கள் தேர்ந்தெடுக்கும் விருப்பங்கள் மற்றும் அமைப்புகள், எங்கள் தயாரிப்புகளிலும் பிற தயாரிப்புகளிலும் நீங்கள் பகிரும் மற்றும் செய்யும் செயல்கள் போன்று எங்களிடம் உள்ள தரவைப் பயன்படுத்துகிறோம்.
நீங்கள் முக்கியமாகக் கருதும் மக்கள் மற்றும் நிறுவனங்களுடன் உங்களை இணைத்தல்:
நீங்கள் பயன்படுத்தும் Facebook தயாரிப்புகள் அனைத்திலும் மக்கள், குழுக்கள், வணிகங்கள், நிறுவனங்கள் மற்றும் நீங்கள் முக்கியமாகக் கருதும் பிற விஷயங்களைக் கண்டறிந்து, தொடர்புகொள்வதற்கான உதவியை வழங்குகிறோம். சேர்வதற்கான குழுக்கள், கலந்துகொள்வதற்கான நிகழ்வுகள், பின்தொடர்வதற்கான பக்கங்கள் அல்லது செய்தியை அனுப்புவதற்கான பயனர்கள், பார்ப்பதற்கான ஷோக்கள், நீங்கள் நண்பராக விரும்பக்கூடிய பயனர்கள் போன்ற பரிந்துரைகளை உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வழங்குவதற்காக, எங்களிடம் உள்ள தரவைப் பயன்படுத்துகிறோம். நட்பான சமூகம் உருவாவதற்கு வலுவான உறவுகளே அடித்தளமாகும், மேலும் மக்கள் மக்களுடனும், குழுக்களுடனும், அவர்கள் முக்கியமாகக் கருதும் நிறுவனங்களுடனும் இணைப்பிலிருந்தே எங்கள் சேவைகள் மிகவும் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறோம்.
எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும் முக்கியமாகக் கருதும் விஷயங்களைத் தெரிவிப்பதற்குமான ஆற்றலை உங்களுக்கு வழங்குதல்:
உங்கள் எண்ணங்களை Facebook இல் வெளிப்படுத்தவும் நீங்கள் முக்கியமாகக் கருதும் விஷயங்களை நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பிறருக்குத் தெரிவிக்கவும் பல வழிகள் உள்ளன. உதாரணமாக, நீங்கள் பயன்படுத்தும் Facebook தயாரிப்புகள் அனைத்திலும் நிலைப் புதுப்பிப்புகள், படங்கள், வீடியோக்கள் மற்றும் கதைகளைப் பகிர்தல், நண்பருக்கோ அல்லது பிறருக்கோ செய்திகளை அனுப்புதல், நிகழ்வுகள் அல்லது குழுக்களை உருவாக்குதல் அல்லது உங்கள் சுயவிவரத்தில் உள்ளடக்கத்தைச் சேர்த்தல். Facebook இல் மிகவும் வெளிப்படையான மற்றும் கவரக்கூடிய உள்ளடக்கத்தை உருவாக்கி, பகிர்வதற்காக, ஆக்மண்டட் ரியாலிட்டி, 360 டிகிரி வீடியோ போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகளை உருவாக்கியுள்ளோம். அத்துடன், இது தொடர்பான ஆராய்ச்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.
நீங்கள் ஆர்வங்காட்டக்கூடிய உள்ளடக்கம், தயாரிப்புகள், சேவைகள் ஆகியவற்றைக் கண்டறிய உங்களுக்கு உதவுதல்:
Facebook மற்றும் பிற Facebook தயாரிப்புகளைப் பயன்படுத்தும் பல்வேறு வணிகங்களும் நிறுவனங்களும் வழங்கும் உள்ளடக்கம், தயாரிப்புகள், சேவைகள் ஆகியவற்றைக் கண்டறிய உங்களுக்கு உதவும் வகையில், விளம்பரங்கள், ஆஃபர்கள் மற்றும் விளம்பரப்படுத்திய பிற உள்ளடக்கத்தையும் உங்களுக்குக் காட்டுகிறோம். எங்கள் கூட்டாளர்கள், அவர்களது உள்ளடக்கத்தை உங்களுக்குக் காட்டுவதற்காக எங்களுக்குப் பணம் செலுத்துகின்றனர், மேலும் எங்கள் தயாரிப்புகளில் நீங்கள் பார்க்கும் மற்ற எல்லா உள்ளடக்கமும் எந்தளவு உங்களுக்குத் தொடர்புடையதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறதோ அதே அளவு விளம்பரப்படுத்திய உள்ளடக்கமும் இருக்கும் வகையில் எங்கள் சேவைகளை வடிவமைத்துள்ளோம்.
தீங்குவிளைவிக்கும் நடத்தைக்கு எதிராக நடவடிக்கையை மேற்கொண்டு, எங்கள் சமூகத்திற்குப் பாதுகாப்பையும் ஆதரவையும் வழங்குதல்:
மக்கள் பாதுகாப்பாக உணர்ந்தால் மட்டுமே, Facebook இல் நட்பான சமூகத்தை உருவாக்க முடியும். எங்கள் தயாரிப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது, பிறருக்குத் தீங்குவிளைவிக்கும் நடத்தை, நமது சமூகத்திற்கு ஆதரவளிக்க அல்லது அதைப் பாதுகாக்க நாங்கள் உதவக்கூடிய சூழல்கள் ஆகியவற்றைக் கண்டறிவதற்காக, மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்புகளை உருவாக்கியுள்ளோம், மேலும் இது தொடர்பான விஷயங்களைக் கையாளக்கூடிய எங்கள் பிரத்யேக குழுக்கள் உலகம் முழுவதும் செயல்படுகின்றன. இதுபோன்ற உள்ளடக்கத்தைக் குறித்தோ அல்லது உதவி வழங்குதல், உள்ளடக்கத்தை அகற்றுதல், சில அம்சங்களுக்கான அணுகலைத் தடுத்தல், கணக்கை முடக்குதல் அல்லது சட்ட அமலாக்கத் துறையைத் தொடர்புகொள்ளுதல் போன்ற நடத்தையைக் குறித்தோ எங்களுக்குத் தெரிய வந்தால், உரிய நடவடிக்கையை மேற்கொள்வோம். எங்களின் தயாரிப்புகளில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்துபவர் தவறாகப் பயன்படுத்துதல் அல்லது தீங்குவிளைவிக்கும் நடத்தையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தால், பிற Facebook நிறுவனங்களுடன் தரவைப் பகிர்வோம்.
அனைவருக்கும் பாதுகாப்பான, செயல்படக்கூடிய சேவைகளை வழங்குவதற்காக, மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்:
உடல்திறன் அல்லது புவி இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல், மக்கள் பாதுகாப்பான முறையில் எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் வகையில், ஆர்ட்டிஃபிஷியல் இண்ட்டெலிஜென்ஸ், மெஷின் லேர்னிங் சிஸ்டம்ஸ், ஆக்மண்டட் ரியாலிட்டி போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதுடன் நில்லாமல், அவற்றை உருவாக்கவும் செய்கிறோம். எடுத்துக்காட்டாக, பார்வைக்குறைபாடு உள்ளவர்கள் Facebook அல்லது Instagram இல் பகிரப்பட்டுள்ள படங்கள் அல்லது வீடியோக்களில் என்ன இருக்கிறது அல்லது யார் இருக்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இதுபோன்ற தொழில்நுட்பம் உதவும். இணையத்தை ஓரளவு மட்டுமே பயன்படுத்தக்கூடிய பகுதிகளிலும் அதிகமானோர் இணையத்தைப் பயன்படுத்துவதற்கு உதவும் வகையில், அதிநவீன நெட்வொர்க்கையும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தையும் உருவாக்குகிறோம். நமது சமூகத்திற்கும் எங்கள் தயாரிப்புகளின் ஒருங்கிணைப்பிற்கும் தீங்குவிளைவிக்கக்கூடிய முறைகேடான, ஆபத்தான செயல்பாட்டைக் கண்டறிந்து, அகற்றுவதற்கான எங்கள் திறனை மேம்படுத்த, தன்னியக்க அமைப்புகளையும் உருவாக்குகிறோம்.
எங்கள் சேவைகளைச் சிறப்பாக்குவதற்கான ஆராய்ச்சி வழிகள்:
எங்களிடத்தில் உள்ள தரவை ஆராய்ந்து, எங்கள் தயாரிப்புகளை மக்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் இதைச் செய்கிறோம். எங்கள் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்காக, பிறருடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம். எங்களின் சில ஆராய்ச்சி பணிகளைக் குறித்து மேலும் அறிந்துக்கொள்ளலாம்.
Facebook நிறுவனத் தயாரிப்புகள் அனைத்திலும் சீரான, தடையில்லாத அனுபவங்களை வழங்குதல்:
நபர்கள், குழுக்கள், வணிகங்கள், நிறுவனங்கள் மற்றும் உங்களுக்கு முக்கியமானவர்களைக் கண்டறியவும் தொடர்புகொள்ளவும் எங்கள் தயாரிப்புகள் உதவுகின்றன. நீங்கள் பயன்படுத்தும் வெவ்வேறு Facebook நிறுவனத் தயாரிப்புகள் அனைத்திலும் சீரான மற்றும் தடையில்லாத அனுபவத்தை பெறும்படி எங்கள் அமைப்புகளை வடிவமைத்துள்ளோம். எடுத்துக்காட்டாக, Facebook இல் நீங்கள் தொடர்பில் இருக்கும் நபர்களைப் பற்றிய தரவைப் பயன்படுத்தி, அவர்களுடன் Instagram அல்லது Messenger இல் நீங்கள் எளிதாக இணையும்படி செய்வோம். Facebook இல் நீங்கள் பின்தொடரும் வணிகத்துடன் Messenger வழியாக தொடர்புகொள்ளும் வசதியை வழங்குவோம்.
எங்கள் சேவைகளுக்கு உலகளாவிய அணுகலை வழங்குதல்:
எங்கள் உலகளாவிய சேவையைச் செயல்படுத்த, நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு வெளியே இருப்பவை உட்பட உலகெங்கும் உள்ள எங்கள் தரவு மையங்கள் மற்றும் அமைப்புகளில் உள்ளடக்கத்தையும் தரவையும் சேமித்து, பகிர வேண்டும். இந்தக் கட்டமைப்பானது Facebook, Inc., Facebook அயர்லாந்து லிமிடெட் அல்லது அதன் துணை நிறுவனங்களால் நடத்தப்படலாம் அல்லது கட்டுப்படுத்தப்படலாம்.

2. எங்கள் தரவுக் கொள்கை மற்றும் உங்கள் தனியுரிமை விருப்பங்கள்

மேலே விவரிக்கப்பட்டுள்ள சேவைகளை வழங்குவதற்காக, உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் சேகரித்து, பயன்படுத்துகிறோம். உங்கள் தரவை நாங்கள் எவ்வாறு சேகரித்து, பயன்படுத்துகிறோம் என்பது குறித்து, எங்கள் தரவுக் கொள்கையில் அறிந்துகொள்ளலாம்.
உங்கள் தரவை நாங்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து நீங்கள் கொண்டுள்ள தனியுரிமை விருப்பங்களை உங்கள், அமைப்புகளில் பார்ப்பதற்குப் பரிந்துரைக்கிறோம்.

3. Facebook மற்றும் எங்கள் சமூகத்திற்கு உங்களின் கடமைகள்

எங்கள் நோக்கத்தை முன்னெடுப்பதற்கு இந்தச் சேவைகளை உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வழங்குகிறோம். அதற்குப் பதிலாக, பின்வரும் உறுதிமொழிகளை நீங்கள் எடுக்க விரும்புகிறோம்:
1. Facebook ஐ யார் பயன்படுத்தலாம்
மக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் செயல்களில் உண்மையாக இருக்கும்போது, நமது சமூகம் பாதுகாப்பாகவும், இன்னும் பொறுப்பாகவும் இருக்கும். அதன் காரணமாக, நீங்கள் செய்யவேண்டியவை:
  • அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் பெயரையே பயன்படுத்துங்கள்.
  • உங்களைப் பற்றிய சரியான தகவல்களை வழங்குங்கள்.
  • ஒரேயொரு கணக்கை (உங்களுக்குச் சொந்தமானது) மட்டும் உருவாக்கி, தனிப்பட்ட நோக்கங்களுக்கு மட்டும் உங்கள் காலக்கோட்டைப் பயன்படுத்துங்கள்.
  • உங்கள் கடவுச்சொல்லைப் பகிர வேண்டாம், பிறருக்கு உங்கள் Facebook கணக்கின் அணுகலை வழங்க வேண்டாம் அல்லது வேறு எவருக்கும் உங்கள் கணக்கை மாற்ற வேண்டாம் (எங்கள் அனுமதி இல்லாமல்).
பரவலாக எல்லோரும் பயன்படுத்தும் வகையில் Facebook ஐ உருவாக்குகிறோம். இருப்பினும், பின்வரும் நிலைகளில் உங்களால் Facebook ஐப் பயன்படுத்த முடியாது:
  • 13 வயதுக்குக் கீழ் உள்ளவராக இருந்தால்.
  • பாலியல் குற்றவாளியாக இருந்தால்.
  • எங்களின் விதிமுறைகள் அல்லது கொள்கைகளை மீறியதன் காரணமாக, உங்கள் கணக்கை ஏற்கனவே நாங்கள் முடக்கியிருந்தால்.
  • பொருந்தக்கூடிய சட்டங்களின்படி, எங்களின் தயாரிப்புகள், சேவைகள் அல்லது மென்பொருள் போன்றவற்றைப் பெறுவதில் இருந்து நீங்கள் தடைசெய்யப்பட்டிருந்தால்.
2. Facebook இல் நீங்கள் என்ன பகிரலாம், செய்யலாம்
பிறரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு அல்லது எங்கள் சமூகத்தின் நன்மதிப்பு போன்றவற்றிற்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல், மக்கள் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும் அவர்களுக்கு முக்கியமாக இருக்கும் உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கும் Facebook ஐப் பயன்படுத்த வேண்டுமென விரும்புகிறோம். அதனால், கீழே கொடுக்கப்பட்டுள்ள நடத்தைகளில் (அல்லது வேறொருவர் அதைச் செய்வதற்கு எளிதாக்குதல் அல்லது உதவுதல்) ஈடுபடக்கூடாது என்பதை ஏற்கிறீர்கள்:
  1. பின்வருவனவற்றைச் செய்ய அல்லது பகிர, எங்களின் தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்தக்கூடாது:
    • Facebook ஐ நீங்கள் பயன்படுத்துவது தொடர்பாக, இந்த விதிமுறைகள் , எங்களின் சமூகத் தரநிலைகள், மற்றும் பிற விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை மீறும் செயல்கள்.
    • சட்டத்திற்குப் புறம்பான, தவறாக வழிநடத்தும், பாரபட்சம் அல்லது மோசடி செயல்கள்.
    • ஒருவரின் உரிமையை மீறும் அல்லது அதற்கு எதிரான செயல்கள்.
  2. வைரஸ்கள் அல்லது தீங்கிழைக்கும் குறியீட்டைப் பதிவேற்றக்கூடாது அல்லது எங்களின் தயாரிப்புகளின் செயல்பாடு அல்லது தோற்றத்தை முடக்க, பழுதாக்க அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக எதையும் செய்யக்கூடாது.
  3. தானியங்கு முறைகளைப் பயன்படுத்தி எங்களின் தயாரிப்புகளின் தரவை அணுகவோ அல்லது சேகரிக்கவோ கூடாது (எங்களின் முன்அனுமதி இல்லாமல்) அல்லது உங்களுக்கு அணுகல் அனுமதி இல்லாத தரவை அணுகக்கூடாது.
இந்த விதிகளுக்கு எதிராக நீங்கள் பகிரும் உள்ளடக்கத்தை நாங்கள் அகற்றலாம் மற்றும் பொருந்தினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள காரணங்களுக்காக, உங்கள் கணக்கிற்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்கலாம். நீங்கள் மற்றவர்களின் அறிவுசார் சொத்துரிமைகளைத் தொடர்ந்து மீறினால், உங்கள் கணக்கையும் முடக்கலாம்.
எங்கே பொருந்துகின்றதோ, எங்கள் சமூகத் தரநிலைகளை மீறியதற்காக உங்கள் உள்ளடக்கத்தை நாங்கள் அகற்றும்போது உங்களுக்கு அறிவிப்போம். எல்லாச் சூழலிலும் எங்களால் அறிவிப்பை வழங்க முடியாமல் போகலாம். எடுத்துக்காட்டாக, சட்டத்தின்படி அவ்வாறு செய்வதற்கு எங்களுக்குத் தடை இருந்தால் அல்லது எங்கள் சமூகத்தையோ அல்லது எங்கள் தயாரிப்புகளின் நம்பகத்தன்மையோ பாதிக்கக்கூடியதாக இருந்தால்.
நமது சமூகத்திற்கு உதவ, உங்கள் உரிமைகள் (அறிவுசார் சொத்துரிமைகள் உட்பட) அல்லது எங்களின் விதிமுறைகள் அல்லது கொள்கைகளை மீறுவதாக நீங்கள் கருதும் நடத்தை அல்லது உள்ளடக்கத்தைப் புகாரளிக்கவும்.
3. நீங்கள் எங்களுக்கு வழங்கும் அனுமதிகள்
எங்கள் சேவைகளை வழங்குவதற்கு, குறிப்பிட்ட அனுமதிகளை நீங்கள் வழங்க வேண்டும்:
  1. நீங்கள் உருவாக்கும் மற்றும் பகிரும் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதி: Facebook மற்றும் பிற Facebook தயாரிப்புகளில் நீங்கள் உருவாக்கும் மற்றும் பகிரக்கூடிய உள்ளடக்கம் உங்களுக்குச் சொந்தமானதாகும், மேலும் இந்த விதிமுறைகளில் உள்ள எதுவும் உங்கள் உள்ளடக்கம் மீது உங்களுக்குள்ள உரிமைகளைப் பறிப்பதில்லை. நீங்கள் விரும்பும் யாருடனும், எங்கும் உங்கள் உள்ளடக்கத்தைப் பகிரலாம். இருப்பினும், எங்கள் சேவைகளை வழங்க, அந்த உள்ளடக்கத்தைப் பயன்படுத்த சில சட்டப்பூர்வ அனுமதிகளை எங்களுக்கு நீங்கள் வழங்க வேண்டும்.
    குறிப்பாக, அறிவுசார் சொத்துரிமைகளுக்கு உட்படும் உள்ளடக்கங்களை எங்கள் தயாரிப்புகளில் அல்லது அவற்றோடு தொடர்புடையவற்றில் (படங்கள் அல்லது வீடியோக்கள் போன்றவை) பகிர்தல், இடுகையிடுதல் அல்லது பதிவேற்றுதல் ஆகியவற்றைச் செய்யும் போது, பிரத்யேகமல்லாத, பிறருக்கு வழங்கக்கூடிய, துணை உரிமம் பெறக்கூடிய, ராயல்டி இல்லாத மற்றும் தொகுக்க, பயன்படுத்த, விநியோகிக்க, மாற்ற, இயக்க, நகலெடுக்க, பொதுவில் செயல்படுத்த அல்லது காட்சிப்படுத்த, மொழிபெயர்க்க மற்றும் உங்கள் உள்ளடக்கம் தொடர்பான வேலைகளை உருவாக்குவதற்கான உலகளாவிய உரிமத்தை எங்களுக்கு அளிக்கிறீர்கள் (உங்கள் தனியுரிமை மற்றும் பயன்பாட்டு அமைப்புகளுக்கு இணங்க). அதாவது, எடுத்துக்காட்டாக, Facebook இல் நீங்கள் படத்தைப் பகிர்ந்தால், அதைச் சேமிப்பது, நகலெடுப்பது மற்றும் எங்கள் சேவையை அல்லது நீங்கள் பயன்படுத்தும் பிற Facebook தயாரிப்புகளை ஆதரிக்கும் சேவை வழங்குநர்கள் போன்றோருடன் பகிர்வதற்கான (மீண்டும், உங்கள் அமைப்புகளுக்கு இணங்க) அனுமதியை எங்களுக்கு வழங்குகிறீர்கள்.
    உங்கள் உள்ளடக்கம் அல்லது கணக்கை நீக்கி, இந்த உரிமத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முடிக்கலாம். தொழில்நுட்பக் காரணங்களுக்காக, நீங்கள் நீக்கும் உள்ளடக்கமானது, (பிற பயனர்களால் அதைப் பார்க்க முடியாது என்றாலும்) காப்புப்பிரதிகளில் குறிப்பிட்ட நேரத்திற்குத் தொடர்ந்து இருக்கக்கூடும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். மேலும், நீங்கள் நீக்கும் உள்ளடக்கமானது பிறருடன் பகிரப்பட்டிருந்து, அதை அவர்கள் நீக்காமல் இருந்தால், அது தொடர்ந்து காட்டப்படக்கூடும்.
  2. உங்கள் பெயர், சுயவிவரப் படம் மற்றும் விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர் செய்த உள்ளடக்கத்துடனான உங்கள் செயல்கள் பற்றிய தகவல்களைப் பயன்படுத்துவதற்கான அனுமதி: உங்கள் பெயர், சுயவிவரப் படம் மற்றும் விளம்பரங்கள் மற்றும் எங்கள் தயாரிப்புகளில் நாங்கள் காண்பிக்கும் விளம்பரங்கள், சலுகைகள் மற்றும் பிற ஸ்பான்சர் செய்த உள்ளடக்கத்திற்கு அடுத்து அல்லது தொடர்புடைய Facebook இல் நீங்கள் மேற்கொண்ட செயல்கள் பற்றிய தகவல்களைப் பயன்படுத்த அனுமதியை வழங்குகிறீர்கள். உங்களுக்கு எந்தச் சன்மானமும் வழங்கப்படாது. எடுத்துக்காட்டாக, நீங்கள் ஆர்வம் காட்டிய விளம்பரப்படுத்திய நிகழ்வையோ அல்லது விருப்பம் தெரிவித்த, தனது விளம்பரங்களை Facebook இல் காண்பிக்க எங்களுக்கு ஊதியம் அளிக்கும் பிராண்டு உருவாக்கிய பக்கத்தையோ உங்கள் நண்பர்களுக்குக் காட்டக்கூடும். Facebook இல் நீங்கள் மேற்கொள்ளும் செயல்களைப் பார்ப்பதற்கு உங்கள் அனுமதியைப் பெற்றவர்களால் மட்டுமே இது போன்ற விளம்பரங்களைப் பார்க்க முடியும். உங்கள் விளம்பர அமைப்புகள் மற்றும் விருப்பத்தேர்வுகள் பற்றி மேலும் அறியவும்.
  3. நீங்கள் பயன்படுத்தும் அல்லது பதிவிறக்கும் மென்பொருளைப் புதுப்பிப்பதற்கான அனுமதி: எங்கள் மென்பொருளை நீங்கள் பயன்படுத்தினாலோ அல்லது பதிவிறக்கினாலோ, மேம்படுத்தல்கள், புதுப்பிப்புகள் மற்றும் அதை மேம்படுத்துவது போன்ற கூடுதல் அம்சங்களைப் பதிவிறக்கவும் நிறுவவும் எங்களுக்கு அனுமதி அளிக்கிறீர்கள்.
4. எங்கள் அறிவுசார் சொத்தைப் பயன்படுத்துவதற்கான வரம்புகள்
அறிவுசார் சொத்துரிமையின் கீழ் வரும் எங்களிடத்தில் உள்ள உள்ளடக்கம் மற்றும் எங்கள் தயாரிப்புகளில் கிடைக்கும் உள்ளடக்கம் (எடுத்துக்காட்டாக, நாங்கள் வழங்கும் படங்கள், டிசைன்கள், வீடியோக்கள் அல்லது ஒலிகள் ஆகியவற்றை Facebook இல் நீங்கள் உருவாக்கும் அல்லது பகிரும் உள்ளடக்கத்துடன் சேர்ப்பது) ஆகியவற்றைப் பயன்படுத்தினால், அந்த உள்ளடகத்திற்கான (ஆனால் உங்களுடையது இல்லை) அனைத்து உரிமைகளும் எங்களுக்குச் சொந்தமாகும். எங்கள் பிராண்ட் பயன்பாட்டு வழிகாட்டுதல்களில் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளபடி அல்லது எங்களிடம் எழுத்துப்பூர்வமான முன் அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே எங்கள் பதிப்புரிமைகள் அல்லது வர்த்தக முத்திரைகளைப் (அல்லது அதைப் போன்ற ஏதேனும் முத்திரைகள்) பயன்படுத்தலாம். மூலக் குறியீட்டைத் திருத்த, அதிலிருந்து பிற படைப்புகளை உருவாக்க, மீள் தொகுப்பு செய்ய அல்லது மூலக் குறியீட்டைப் பெற முயற்சிப்பதற்கு எங்களின் எழுத்துப்பூர்வமான அனுமதியைப் (அல்லது ஓப்பன் சோர்ஸ் உரிமத்தின் கீழ் அனுமதி) பெற வேண்டும்.

4. கூடுதல் விதிகள்

1. எங்களின் விதிமுறைகளைப் புதுப்பித்தல்
எங்கள் தயாரிப்புகளை நீங்களும் உங்கள் சமூகமும் சிறப்பாகப் பயன்படுத்தும் வகையில், சேவைகளை அதிகரிக்கவும் புதிய அம்சங்களை மேம்படுத்தவும் தொடர்ந்து பணியாற்றுகிறோம். இதன் விளைவாக, எங்களின் சேவைகள் மற்றும் நடைமுறைகளைத் துல்லியமாகக் காட்டும் வகையில் அவ்வப்போது இந்த விதிமுறைகளில் நாங்கள் மாற்றங்களைச் செய்யக்கூடும். சட்டப்பூர்வமான தேவை இருந்தால் மட்டுமே, இந்த விதிமுறைகளில் நாங்கள் மாற்றங்கள் செய்வதற்கு 30 நாட்களுக்கு முன்னர், உங்களுக்குத் தெரிவிப்போம் மற்றும் அவற்றைச் செயல்படுத்துவதற்கு முன்னர் மதிப்பாய்வு செய்வதற்கு உங்களுக்கு வாய்ப்பளிப்போம். மாற்றங்கள் செய்யப்பட்ட விதிமுறைகள் நடைமுறையில் இருந்து, எங்களின் தயாரிப்புகளை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால், அவற்றுடன் நீங்கள் இணங்கிச் செயல்பட வேண்டும்.
எங்களின் தயாரிப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம். ஆனால், மாற்றங்கள் செய்யப்பட்ட எங்களின் விதிமுறைகளை நீங்கள் ஏற்காமல், Facebook சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்க விரும்பவில்லை எனில், எப்போது வேண்டுமானாலும் உங்கள் கணக்கை நீங்கள் நீக்கலாம்.
2. கணக்கு இடைநீக்கம் அல்லது முடக்கம்
தங்களை வெளிப்படுத்துவதற்கு, தங்கள் எண்ணங்களையும் சிந்தனைகளையும் பகிர்வதற்கு, தாங்கள் வரவேற்கப்படுவதாகவும் பாதுகாப்பாக உணரும் இடமாகவும் Facebook இருக்க வேண்டுமென விரும்புகிறோம்.
குறிப்பாக, எங்கள் சமூகத் தரநிலைகள் உட்பட எங்கள் விதிமுறைகள் அல்லது கொள்கைகளை நீங்கள் தெளிவாகவும், தீவிரமாகவும் அல்லது திரும்பத் திரும்ப மீறியுள்ளீர்கள் என்பதை நாங்கள் உறுதிசெய்தால், உங்கள் கணக்கிற்கான அணுகல் இடைநீக்கம் செய்யப்படலாம் அல்லது நிரந்தரமாக முடக்கப்படலாம். சட்டத்தின்படி தேவைப்பட்டால், உங்கள் கணக்கு இடைநீக்கம் செய்யப்படும் அல்லது முடக்கப்படும். பொருந்தக்கூடிய இடத்தில், அடுத்த முறை நீங்கள் அணுக முயற்சிக்கும் போது உங்கள் கணக்கைப் பற்றி உங்களுக்கு அறிவிப்போம். உங்கள் கணக்கு முடக்கப்பட்டால் நீங்கள் என்ன செய்யலாம் என்பது குறித்தும், உங்கள் கணக்கை நாங்கள் தவறாக முடக்கியுள்ளதாக நீங்கள் கருதினால், எங்களை எப்படி தொடர்புகொள்ளலாம் என்பது குறித்தும் மேலும் அறிந்துகொள்ளலாம்.
உங்கள் கணக்கை நீங்கள் நீக்கினாலோ அல்லது நாங்கள் முடக்கினாலோ, இந்த விதிமுறைகள் உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் உள்ள ஒப்பந்தமாக நிறுத்தப்படும் ஆனால் பின்வரும் விதிகள் தொடர்ந்து அமலில் இருக்கும்: 3, 4.2-4.5
3. பொறுப்பு மீதான வரம்புகள்
எங்கள் தயாரிப்புகளை வழங்கவும் தொடர்ந்து பாதுகாப்பான, ஆபத்தற்ற மற்றும் பிழையற்ற சூழலைத் தக்கவைக்கவும், தேவையான திறனையும் பராமரிப்பையும் கையாள்கிறோம். இருப்பினும், எங்கள் தயாரிப்புகள் எப்போதுமே இடையூறுகள், தாமதங்கள் அல்லது குறைபாடுகள் இல்லாமல் செயல்படும் என்பதற்கு எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது. மேற்கூறியவாறு, தேவையான திறனையும் பராமரிப்பையும் கொண்டு நாங்கள் செயல்பட்டாலும், இந்த விதிமுறைகளை மீறியதன் காரணமாகவோ அல்லது எங்களது பிற செயல்களின் காரணமாகவோ ஏற்படாத இழப்புகள், இந்த விதிமுறைகளின் கீழ் செயல்படத் தொடங்கிய போது நீங்களும் நாங்களும் எதிர்பார்க்காத இழப்புகள் நேரிடுவது, பிறர் இடுகையிட்ட புண்படுத்தக்கூடிய, பொருத்தமற்ற, ஆபாசமான, சட்டவிரோதமான அல்லது கண்டனத்துக்குரிய உள்ளடக்கத்தை எங்கள் தயாரிப்புகளில் நீங்கள் பார்ப்பது மற்றும் எங்களது நியாயமான கட்டுப்பாட்டுக்கும் மீறி ஏற்படும் நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
எங்களது அலட்சியத்தின் காரணமாக மரணம், தனிநபர் காயம் அல்லது மோசடியான முறையில் தவறாகத் தகவல் வழங்கப்படுதல் ஆகியவை ஏற்பட்டால், மேற்கூறியவற்றின் கீழ் அவற்றின் பொறுப்புகளுக்கான விதிவிலக்குகளோ அல்லது வரம்புகளோ அளிக்கப்படாது. சட்டம் அனுமதிக்காத பிற செயல்களை நாங்கள் மேற்கொண்டாலும், இவற்றின் கீழ் அதற்கான பொறுப்புகளிலிருந்து விதிவிலக்குகளோ அல்லது வரம்புகளோ அளிக்கப்படாது.
4. பிணக்குகள்
உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஏற்படக்கூடிய முரண்பாடுகளைக் கட்டுப்படுத்தும் அல்லது தவிர்க்கும் வகையில், தெளிவான விதிகளை வழங்க முயற்சிக்கிறோம். எனினும், அவ்வாறு முரண்பாடு ஏற்பட்டால், அது எங்கே தீர்க்கப்படும் மற்றும் அதற்கான சட்டங்கள் என்ன என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்வது பயனுள்ளதாகும்.
நீங்கள் நுகர்வோராக இருந்து, வழக்கமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாட்டில் வசிப்பவராக இருந்தால், மேற்கொள்ளப்படும் அனைத்து கிளைம்கள், செயல் விளைவு அல்லது இந்த விதிமுறைகள் அல்லது Facebook தயாரிப்புகளின் ("கிளைம்") விளைவாகவோ அல்லது இது தொடர்பாகவோ ஏற்படும் முரண்பாடு ஆகியவற்றுக்கு உறுப்பு நாட்டின் சட்டங்கள் பொருந்தும், மேலும் அந்த நாட்டில் உள்ள கிளைமைச் செயல்படுத்துவதற்கான சட்டப்பூர்வ அதிகாரத்தைக் கொண்ட தகுந்த நீதிமன்றத்தில் உங்கள் கிளைமிற்கான தீர்வைப் பெறலாம். மேற்கூறியவை தவிர மற்ற எல்லா நிலைமைகளிலும், கிளைமிற்கான தீர்வு அயர்லாந்து குடியரசின் தகுந்த நீதிமன்றத்தில் வழங்கப்பட வேண்டும் என்பதையும் சட்ட விதிகளில் எந்த முரண்பாடு இருந்தாலும், இந்த விதிமுறைகளும் மேற்கொள்ளப்படும் எந்தவொரு கிளைமும் ஐரிஷ் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் என்பதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள்.
5. மற்றவை
  1. இந்த விதிமுறைகள் (முன்னர் உரிமைகள் மற்றும் பொறுப்புகளுக்கான அறிக்கை என்று அறியப்பட்டது) எங்கள் தயரிப்புகளை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பாக உங்களுக்கும் Facebook Ireland Limitedக்கும் இடையே முழு ஒப்பந்தத்தை ஏற்படுத்துகிறது. முந்தைய ஒப்பந்தங்கள் எதையும் இவை மாற்றியமைக்கும்.
  2. நாங்கள் வழங்கும் சில தயாரிப்புகளும் துணை விதிமுறைகளால் நிர்வகிக்கப்படுகிறது. இந்தத் தயாரிப்புகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்தினால், உங்களுடனான எங்கள் ஒப்பந்தத்தின் பகுதியாக அமையும் துணை விதிமுறைகளை ஏற்பதற்கான வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படும். உதாரணமாக, விளம்பரங்களை வாங்குதல், தயாரிப்புகளை விற்பனை செய்தல், பயன்பாடுகளை உருவாக்குதல், உங்கள் வணிகத்திற்காக குழு அல்லது பக்கத்தை நிர்வகித்தல் அல்லது எங்கள் அளவீடு சேவைகளைப் பயன்படுத்துதல் போன்று எங்கள் தயாரிப்புகளை வர்த்தக ரீதியாக அல்லது வணிக நோக்கங்ளுக்காக அணுகினால் அல்லது பயன்படுத்தினால், நீங்கள் எங்கள் வர்த்தக விதிமுறைகளை ஏற்க வேண்டும். இசையைக் கொண்ட உள்ளடக்கத்தை நீங்கள் இடுகையிடுகிறீர்கள் அல்லது பகிர்கிறீர்கள் என்றால் எங்கள் இசை விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். துணை விதிமுறைகளுக்கும் இந்த விதிமுறைகளுக்கும் இடையே எந்தளவுக்கு முரண்பாடு உள்ளதோ, அந்த அளவுக்கு துணை விதிமுறைகள் நிர்வகிக்கப்படும்.
  3. இந்த விதிமுறைகளில் எந்தப் பகுதியாவது நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் இருந்தால், மீதமுள்ள பகுதி முழுமையாக நடைமுறையில் இருக்கும். இந்த விதிமுறைகளின் எந்தப் பகுதியையாவது நாங்கள் செயல்படுத்தத் தவறினால், அது தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கருதப்படாது. இந்த விதிமுறைகளில் செய்யப்படும் திருத்தங்கள் அல்லது தள்ளுபடிகள் தொடர்பான தகவல்கள் எழுத்துப்பூர்வமாக, கையொப்பமிடப்பட்டு வழங்கப்படும்.
  4. எங்கள் அனுமதி இல்லாமல், இந்த விதிமுறைகளின் கீழ் உள்ள உங்கள் உரிமைகளையோ அல்லது கடமைகளையோ நீங்கள் வேறு யாருக்கும் மாற்றக்கூடாது.
  5. உங்கள் கணக்கு நினைவுக் கணக்காக மாற்றப்பட்டால், அதை நிர்வகிக்க ஒருவரை (விருப்புரிமைத் தொடர்பு என்றழைக்கப்படும்) நீங்கள் நியமிக்கலாம். மரணம் அல்லது இயலாமையின் பொருட்டு உங்கள் விருப்புரிமைத் தொடர்பு அல்லது உங்கள் உள்ளடக்கத்தை வெளியிடுவதற்குத் தெளிவான ஒப்புதலை வெளிப்படுத்தும் உயில் அல்லது சமமான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டவர் மட்டுமே உங்கள் கணக்கு நினைவுக் கணக்காக மாற்றப்பட்ட பிறகு அதை வெளியிடுவதற்குக் கோர முடியும்.
  6. இந்த விதிமுறைகள் மூன்றாம் தரப்பு பயனாளர்கள் உரிமைகள் எதையும் வழங்குவதில்லை. சட்டப்படியாகவோ அல்லது பிற முறைகளிலோ இணைத்தல், கையகப்படுத்தல் அல்லது சொத்துகளை விற்பனை செய்தல் ஆகியவை மேற்கொள்ளப்படும் போது, இந்த விதிமுறைகளின் கீழ் உள்ள எங்கள் உரிமைகள் மற்றும் கடமைகள் அனைத்தும், எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் மாற்றப்படும்.
  7. சில சூழ்நிலைகளில் (எடுத்துக்காட்டாக, ஒருவர் பயனர்பெயரை கிளைம் செய்து, அது நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெயருடன் தொடர்பில்லாமல் இருந்தால்) உங்கள் பயனர்பெயரை நாங்கள் மாற்ற நேரிடும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
  8. எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றிய உங்கள் பின்னூட்டம் மற்றும் பரிந்துரைகளை நாங்கள் எப்பொழுதும் பாராட்டுகிறோம். ஆனால், உங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமென்ற கட்டுப்பாடோ அல்லது கடமையோ இல்லாமல், அவற்றை நாங்கள் பயன்படுத்தக்கூடும், மேலும் அவற்றை இரகசியமாக வைத்திருப்பதற்கான கடமை எங்களுக்கு இல்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பது அவசியம்
  9. வெளிப்படையாக உங்களுக்கு வழங்கப்படாத எல்லா உரிமையும் எங்களுக்கு உரியதாகும்.

5. உங்களுக்குப் பொருந்தக்கூடிய பிற விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்

  • சமூகத் தரநிலைகள்: Facebook இல் நீங்கள் இடுகையிடும் உள்ளடக்கம் மற்றும் Facebook மற்றும் பிற Facebook தயாரிப்புகளில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்குப் பொருந்தும் கொள்கைகளை இந்த வழிகாட்டுதல்கள் வழங்குகின்றன.
  • வணிக விதிமுறைகள்: விளம்பரப்படுத்துவது, எங்கள் பிளாட்பார்மில் பயன்பாட்டைச் செயல்படுத்துவது, எங்கள் அளவீடு சேவைகளைப் பயன்படுத்துவது, வணிகத்திற்காகக் குழு அல்லது பக்கத்தை நிர்வகிப்பது அல்லது பொருட்கள் அல்லது சேவைகளை விற்பனை செய்வது உள்ளிட்ட ஏதேனும் வர்த்தகம் அல்லது வணிக நோக்கத்திற்காக, எங்கள் தயாரிப்புகளை அணுகினாலும் அல்லது பயன்படுத்தினாலும் இந்த விதிமுறைகள் பொருந்தும்.
  • விளம்பரப்படுத்தல் கொள்கைகள்: Facebook தயாரிப்புகள் அனைத்திலும் விளம்பரப்படுத்தும் கூட்டாளர்களுக்கு, எந்த வகையான விளம்பர உள்ளடக்கம் அனுமதிக்கப்படும் என்பதை இந்தக் கொள்கைகள் குறிப்பிடுகின்றன.
  • சுய சேவை விளம்பர விதிமுறைகள்: நீங்கள் விளம்பரங்கள் அல்லது பிற வர்த்தகச் செய்திகள் அல்லது ஸ்பான்சர் செயல்பாடு அல்லது உள்ளடக்கம் ஆகியவற்றை உருவாக்க, சமர்ப்பிக்க அல்லது டெலிவர் செய்ய சுய சேவை விளம்பர இடைமுகங்களைப் பயன்படுத்தினால் இந்த விதிமுறைகள் பொருந்தும்.
  • பக்கங்கள், குழுக்கள் மற்றும் நிகழ்வுகள் கொள்கை: Facebook பக்கம், குழு அல்லது நிகழ்வை உருவாக்கினாலோ அல்லது நிர்வகித்தாலோ அல்லது Facebook ஐப் பயன்படுத்தி விளம்பரத்தை வழங்கினாலோ அல்லது நிர்வகித்தாலோ இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தும்.
  • Facebook பிளாட்பார்ம் கொள்கைகள்: எங்கள் பிளாட்பார்மை நீங்கள் பயன்படுத்துவதற்குப் (எடுத்துக்காட்டாக, பிளாட்பார்ம் பயன்பாடு அல்லது இணையதளத்தின் டெவலப்பர்கள் அல்லது ஆப்ரேட்டர்கள் அல்லது நீங்கள் சமூக செருகுநிரல்களைப் பயன்படுத்தினால்) பொருந்தும் கொள்கைகளை இந்த வழிகாட்டுதல்கள் வழங்குகின்றன.
  • டெவலெப்பர் கட்டண விதிமுறைகள்: Facebook Payments ஐப் பயன்படுத்தும் பயன்பாடுகளின் டெவலப்பர்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தும்.
  • சமூக கட்டண விதிமுறைகள்: Facebook இல் அல்லது Facebook மூலம் செய்யப்பட்ட பணம் செலுத்துதல்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தும்.
  • வர்த்தகக் கொள்கைகள்: Facebook இல் தயாரிப்புகளையும் சேவைகளையும் நீங்கள் விற்பனைக்கு வழங்கும்போது பொருந்தும் கொள்கைகளை, இந்த வழிகாட்டுதல்கள் வழங்குகின்றன.
  • Facebook பிராண்டு வளங்கள்: Facebook டிரேடுமார்க்குகள், லோகோக்கள் மற்றும் ஸ்க்ரீன்ஷாட்களைப் பயன்படுத்துவதற்குப் பொருந்தும் கொள்கைகளை இந்த வழிகாட்டுதல்கள் வழங்குகின்றன.
  • இசை வழிகாட்டுதல்கள்: Facebook இல் இசையைக் கொண்ட உள்ளடக்கத்தை இடுகையிட்டாலோ அல்லது பகிர்ந்தாலோ பொருந்தும் கொள்கைகளை இந்த வழிகாட்டுதல்கள் வழங்குகின்றன.

கடைசியாகத் திருத்திய தேதி: ஏப்ரல் 19, 2018